கிராமப்புற நில ஆவணங்கள், அங்கீகரிக்கப்பட்ட பட்டா நகல்களை ‘தமிழ் நிலம்’ செயலி மூலம் எளிதாக பெறுவதற்கு தமிழ்நாடு புவியியல் தகவல் அமைப்பு மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புவியியல் சார் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் தமிழ்நாடு புவியியல் தகவல் அமைப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சொத்துக்களுக்கு புவியியல் குறியீடுயிடுதல், இயற்கை வளங்களை வரைபடமாக்குதல், பெரிய அளவிலான வரைபடங்களை தயாரித்தல், காட்சிப்படுத்துதல், பகுப்பாய்வுக்கான புவிசார் கருவிகளை தயார் செய்து வழங்குதல், தகவல் பலகைகளை உருவாக்குதல், துல்லியமான புவியியல் குறியீடு தரவுகளை சேகரித்து வழங்குதல் உள்ளிட்ட பணிகள் இதன்மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் தமிழ்நாடு புவியியல் தகவல் அமைப்பானது தற்போது வரை 400-க்கும் மேற்பட்ட புவிசார் தகவல் அடுக்குகளை உருவாக்கி, அதில் 200-க்கும் மேற்பட்ட தகவல் அடுக்குகளை பல்வேறு அரசு துறைகளுடன் பகிர்ந்து அத்துறைகளுக்கான திட்டமிடலில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.
அதேபோல் மாநிலம், மாவட்டம், தாலுகா, கிராமம், வார்டு, நகரம், வட்டம், பஞ்சாயத்துக்கள் உட்பட பல்வேறு துறைகளின் தரவுகள் அனைத்தும் www.tngis.tn.gov.in என்ற புவியியல் தகவல் அமைப்பு தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, GIS எனப்படும் சிறப்பு கோப்பு வடிவங்களில் பயனாளர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் வழிவகை செய்துள்ளது.
இதற்கிடையே கிராமப்புறங்களுக்காக ‘தமிழ் நிலம்’ தரவுத் தளத்துடன் புவியியல் குறிப்புகளில் உள்ள சர்வே எல்லைகளை இணைக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ‘தமிழ் நிலம்’ செயலி மூலம் நில ஆவணங்கள், அங்கீகரிக்கப்பட்ட பட்டா நகல்களை எளிதாக பெறுவதற்கு புவியியல் தகவல் அமைப்பானது உதவி வருகிறது.
இந்த வசதிகளுடன் பட்டா, வில்லங்க சான்றுகள் உள்ளிட்ட நில சம்பந்தப்பட்ட பல்வேறு கூடுதல் தகவல்கள் https://www.tngis.tn.gov.in/apps/gi_viewer/https://www.tngis.tn.gov.in/apps/gi_viewer/ என்ற இணையதளத்தில் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.