மகாராஷ்டிராவில் 4 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை

0
177

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் போலீஸாருடன் நடந்த என்கவுன்ட்டரில், 4 மாவோயிஸ்ட்கள் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தையொட்டி அமைந்துள்ளது. இந்நிலையில், கட்சிரோலி மாவட்டம் கவாண்டே பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பதாக நம்பத்தகுந்த தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. இதையடுத்து போலீஸார், போலீஸ் சிறப்பு கமாண்டோ குழு சி-60 பிரிவினர், சிஆர்பிஃஎப் வீரர்கள் நேற்று முன்தினம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை கனமழை பெய்த போதிலும் 300 போலீஸார் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் கவாண்டே, நெல்குண்டா ஆகிய பகுதிகளில் இருந்து இந்திராவதி ஆற்றின் கரையோரம் வரை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை இந்திராவதி ஆற்றின் கரையோரப் பகுதியில் போலீஸார் வந்தபோது, அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்ட்கள், போலீஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு போலீஸாரும், சிஆர்பிஆஃப் வீரர்களும் துப்பாக்கியால் சுட்டு பதிலடி கொடுத்தனர்.

2 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் 4 மாவோயிஸ்ட்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.

அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், குண்டுகள், வாக்கி-டாக்கி, நக்சல் இலக்கியம் உள்ளிட்ட பொருட்களை போலீஸார் கைப்பற்றினர். சத்தீஸ்கர் மாவட்டத்தில் நடமாடி வந்த பசவராஜ் என்ற நக்சலைட் தலைவர் உள்பட 27 பேர் கடந்த சில தினங்களுக்கு முன் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்நிலையில்தான் மகாராஷ்டிரா – சத்தீஸ்கர் மாநில எல்லையான கட்சிரோலியில் இந்த துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரூ.12.3 கோடி விலை: அண்மையில் சத்தீஸ்கரின் நாராயண்பூரில் நடந்த தேடுதல் வேட்டையில் நக்சல் அமைப்பின் தலைவர் பசவராஜு (என்கிற) நம்பல கேசவ ராவ் உள்ளிட்ட 27 பேர் போலீஸாருடன் நடந்த என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 12 பேர் பெண் நக்சலைட்கள் ஆவர்.

இவர்கள் 27 பேரின் தலைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் மொத்தம் ரூ.12.3 கோடியை விலையாக வைத்திருந்தது. அவர்களை பற்றி தகவல் கொடுக்கும் நபர்களுக்கு இந்த ரூ.12.3 கோடிை பரிசாக அரசு அறிவித்திருந்தது.

இதுகுறித்து உளவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “பசவராஜுக்கு உதவியாக இருந்த மக்கள் சுதந்திர கொரில்லா ராணுவம் (People’s Liberation Guerrilla Army-PLGA) பிரிவில் மொத்தம் 60 பேர் இருந்தனர். இதில் 12 பெண் நக்சலைட் உட்பட 27 பேர் அண்மையில் நடந்த போலீஸ் என்கவுன்ட்டரில் இறந்துள்ளனர்.

இதில் இருந்த பெண் நக்சலைட்கள், ஆண்களைப் போன்று வீரதீரமாக போரிடுவதில் வல்லவர்கள். ஆண்களுக்கு அளிப்பது போன்றே பெண்களுக்கும் இந்த பிஎல்ஜிஏ குழுவில் மிகக் கடுமையான பயிற்சி அளிக்கப்படும்.

உடலை உறுதியாக்க அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், அவர்கள் தங்களது மனதை உறுதிப்படுத்தவும், துல்லியமாக துப்பாக்கியால் சுடுவதற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில் பசவராஜு தலைக்கு மட்டும் ரூ.10 கோடியை பரிசாக தேசிய விசாரணை முகமை (என்ஏஐ), பல்வேறு மாநில அரசுகள் அறிவித்திருந்தன. அதேபோல் மாவோயிஸ்ட் ஜங்கு நவீன் தலைக்கு ரூ.25 லட்சமும், சங்கீதா, பூமிகா, கமாண்டர் ரோஷன், அவரது உதவியாளர் சோம்லி ஆகியோர் தலைக்கு தலா ரூ.10 லட்சம் விலையையும் மாநில அரசுகள் அறிவித்திருந்தன.

மீதமுள்ள 21 பேர் தலைக்கு தலா ரூ.8 லட்சத்தை விலையாக பல்வேறு அரசுகள் அறிவித்திருந்தன. ஆக மொத்தம் ரூ.12.3 கோடி பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டிருந்த நபர்கள்தான் போலீஸார் நடத்திய என்கவுன்ட்டர்களில் கொல்லப்பட்டுள்ளனர்” என்றார்

இதுகுறித்து பஸ்டார் போலீஸ் ஐஜி பி. சுந்தர்ராஜ் கூறும்போது, “இந்த என்கவுன்ட்டர் மாவட்ட ரிசர்வ் போலீஸ் (டிஆர்ஜி) நடத்தியதாகும். எனவே, பரிசுத்தொகை டிஆர்ஜி குழுவுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். இந்த என்கவுன்ட்டர் சத்தீஸ்கர் பகுதியில் நடந்துள்ளதால், மற்ற மாநில அரசுகள் அறிவித்த பரிசுத்தொகையும், சத்தீஸ்கரில் உள்ள டிஆர்ஜி படைக்கே சேரும்” என்றார்.

கொல்லப்பட்ட 27 மாவோயிஸ்ட்களில் 15 பேர், 25 வயதுக்குட்பட்டவர்கள். இதில் ஒரு பெண் 20 வயதை மட்டுமே நிறைவு செய்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here