கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அமலாக்கத் துறை சோதனை நடத்துவது வழக்கமான ஒன்றுதான். மக்கள் வரிப்பணத்தில் ஊழல் செய்தால் கட்டாயம் தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும். ஆனால், அமலாக்கத் துறை சோதனைக்குப் பின்னர் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரிவதில்லை. எனவே, உண்மை நிலை என்ன என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறித்து கருத்துகூற இயலாது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த பல்வேறு வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்குவதன் மூலம் மகளிர் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்று திமுகவினர் கருதுகின்றனர்.
தமிழகத்தில் மது, போதைப் பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாகியுள்ளனர். இதனால், கொலை, கொள்ளைகள் அதிகரித்துள்ளன. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக கூட்டணி நிலை குறித்து 2026 ஜனவரி 9-ம் தேதி கடலூர் மாநாட்டில் அறிவிக்கப்படும். பொள்ளாச்சி பாலியல் வழக்கைப்போல, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திலும் நியாயமான தீர்ப்பு கிடைக்க வேண்டும். இவ்வாறு பிரேமலதா கூறினார்.