மக்களை பாதிக்கும் நகைக்கடன் விதிகளை திரும்ப பெற அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

0
164

 ஏழை, நடுத்தர மக்களைப் பாதிக்கும் நகைக்கடன் பெறுவதற்கான புதிய விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாமக நிறுவனர் ராமதாஸ்: வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்கான 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அடகு வைக்கப்படும் நகைகள் தங்களுக்குச் சொந்தமானவை என்பதற்கான சான்றை தாக்கல் செய்ய வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஏழை, நடுத்தர மக்கள் நகைக்கடன் பெறவே முடியாது என்ற சூழலை உருவாக்கும் இந்த புதிய விதிமுறைகள் கண்டிக்கத்தக்கவை.

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நகைகள் கூட தலைமுறைகளைக் கடந்து பயன்பாட்டில் உள்ள நிலையில், அத்தகைய நகைகளுக்கு ரசீதுகளை தாக்கல் செய்ய வேண்டும் என நிபந்தனை விதிப்பது நியாயமல்ல. தங்க நகைக்கடன் என்பதே நடைமுறை சிக்கல்கள் இல்லாமல் எளிதாக கடன் வாங்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான். எனவே, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வரைவு விதிகளில் பிரிவுகள் 2, 4, 6 ஆகியவற்றை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: தங்க நகைக் கடன் பெறுவதற்கு கடும் நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அவசரத் தேவைக்கு தங்கள் வசமுள்ள தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்து கடன் பெறுவது பெறும் உதவியாக இருந்து வந்த நிலையில், இந்த புதிய நிபந்தனைகளால் ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் சிறு, குறு விவசாயிகள், சிறு, குறுந் தொழில்முனைவோர் அனைவரும் பாதிக்கப்படுவர். புதுப்புது நிபந்தனைகளை விதித்து, சாமனிய மக்களை வங்கி எல்லைக்கு வெளியே நிறுத்தும் ரிசர்வ் வங்கி செயல்பாடுகள் ஏற்கதக்கதல்ல. ரிசர்வ் வங்கி, இந்த நிபந்தனைகளை திரும்பப் பெற வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்குவதிலும், வங்கியில் உடனடி கடன் பெறுவதிலும் மிகுந்த சிரமப்படும் சாதாரண மக்கள், தங்க நகைகளை அடமானம் வைத்து கடன்பெற வங்கிகளை ம் நாடுகின்றனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கி தங்க நகையின் மீது கடன்பெறுவதில் விதித்துள்ள கடும் கட்டுப்பாடு காரணமாக அவர்களால் கடன் பெறவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஏழை, நடுத்தர மக்கள், விவசாயிகள் நலன் கருதி, ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை வாபஸ்பெற வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here