பல்லாவரம் நிலையம் அருகே மின்சார ரயிலில் புகை: பயணிகள் மத்தியில் பதற்றம்

0
161

தாம்பரம் – கடற்கரை மார்க்கத்தில் பல்லாவரம் ரயில் நிலையம் அருகே மின்சார ரயிலில் திடீரென புகை வந்ததால், பயணிகள் பதட்டமடைந்தனர்.

இதற்கிடையில், அதே தண்டவாளத்தில் மற்றொரு ரயில் பின்னால் வந்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ரயில்வே கோட்டத்தில் கடற்கரை – தாம்பரம் வழித்தடம் முக்கியமான உள்ளது. இந்த வழித்தடத்தில் 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்களில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். குறிப்பாக, காலை, மாலை வேளைகளில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் கூட்டம் அலைமோதும். இதன்காரணமாக, இந்த வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களில் எப்போதும் பரபரப்பாக இருக்கும்.

இந்நிலையில், பல்லாவரம் ரயில் நிலையம் அருகே மின்சார ரயிலில் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி ஒரு மின்சார ரயில் புறப்பட்டு, பல்லாவரம் ரயில் நிலையத்தை நேற்று காலை 8 மணி அளவில் வந்தபோது, அந்த ரயிலில் 6-வது பெட்டியில் திடீரென புகை வந்தது.

பிரேக் பைண்டிங்: இதனால், பயணிகள் பதற்றமடைந்து ரயிலில் இருந்து இறங்கி கத்தினர். இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், ரயில்வே ஊழியர்கள் விரைந்துவந்து, ஆய்வு செய்தபோது, பிரேக் பைண்டிங் பிரச்னையால் புகை வந்தது தெரியவந்தது. பிரேக் பைண்டிங் என்பது பிரேக்குகள் சிக்கிக்கொண்டு, ரயில் சக்கரங்கள் சுதந்திரமாக செயல்படுவதை தடுக்கும் நிலையாகும். தொடர்ந்து, ரயில்வே ஊழியர்கள் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், அந்த மின்சார ரயிலுக்கு பின்னால் மற்றொரு மின்சார ரயில் நின்றது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தாம்பரம் – பல்லாவரம் மார்க்கத்தில் உள்ள ரயில் நிலையங்களில் ஆங்காங்கே மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டன. 25 நிமிடத்தில் பிரேக் பைண்டிங் பிரச்னையை சரிசெய்தனர். இதன்பிறகு, அந்த மின்சார ரயில் புறப்பட்டு சென்றது. மின்சார ரயிலில் புகை, பழுது ஏற்பட்ட மின்சார ரயில் பின்னால் மற்றொரு மின்சார ரயில் நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here