தூய்மைப் பணியாளர்கள் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி சவுக்கு சங்கர் தொடர்ந்துள்ள வழக்கை அவசரம், அவசரமாக விடுமுறை கால அமர்வு விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.
தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் வகையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதேபோல துாய்மை பணியாளர்களுக்கு 50 சதவீத மானியத்துடன் நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திகள், உபகரணங்கள் வழங்கும் நமஸ்தே என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டங்களை செயல்படுத்தியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய யூடியூபர் சவுக்கு சங்கர், இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் கடந்த 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம் தமிழகத்தில் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய தூய்மைப் பணியாளர்கள் அமைப்பின் பரிந்துரைப்படி பயனாளிகளை அடையாளம் காண தலித் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சபை என்ற அமைப்பிடம் பணிகள் வழங்கப்பட்டுள்ளன.
முறைகேடு நடந்திருப்பதாக மாநில போலீஸாருக்கு எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் மனுதாரரின் பின்புலத்தையும் ஆராய வேண்டியுள்ளது. திட்ட விவரம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. அதையேற்ற நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை மே 21-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரி தலித் இ்ந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஜென் கிரீன் என்ற அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தூய்மை பணியாளர்கள் திட்டம் தொடர்பான இந்த வழக்கில் எதிர் தரப்பினரை விசாரிக்காமல் அவசரம், அவசரமாக விடுமுறை கால அமர்வு விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பினர்.
மேலும், தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழி்ல் சபை, ஜென் கிரீன் ஆகிய அமைப்புகளையும் இந்த வழக்கில் சேர்த்து விசாரிக்க வேண்டும், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டபிறகே இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தியுள்ளனர்.














