தமிழகத்தில் அச்சப்படும் வகையில் கரோனா பரவல் இல்லை: சுகாதாரத்துறை

0
234

தமிழகத்தில் அச்சப்படும் வகையிலான கரோனா பரவல் இல்லை. பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தொற்று இந்தியா உட்பட உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. இந்தியாவில் 2020 ஜனவரியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்றால் 4.47 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதில், 4.41 கோடிக்கும் அதிகமானோர் தொற்றில் இருந்து குணமடைந்தனர். தொற்றின் தீவிரத்தாலும், இணை நோய் பாதிப்புகளாலும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் 2020 மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கரோனா தொற்றால் 36 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இதில், 35.58 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், 38 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். தொற்றின் முதலாவது மற்றும் 3-வது அலையைவிட 2-வது அலையில்தான் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகமாக இருந்தது.

கடந்த 2023-ம் ஆண்டில் கரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். கடந்த ஜனவரியில் தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு பூஜ்ஜிய நிலையை எட்டியது. பின்னர், அவ்வப்போது தொற்றால் ஓரிருவர் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மீண்டும் கரோனா தொற்றின் புதிய வகை வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தொற்று பாதிப்புகள் பதிவாகி வருகிறது. தமிழகத்தில் 18 பேர் உட்பட நாடுமுழுவதும் சுமார் 100 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் கரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘புதிய வகை கரோனா வைரஸ் தொற்றால் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் இல்லை. தமிழகத்தில் பொதுமக்கள் அச்சப்படும் வகையில் கரோனா பரவல் இல்லை. கரோனாவும் வழக்கமான காய்ச்சல்போல் தான் உள்ளது. 8 கோடி மக்கள் தொகையில், ஓரிருவர் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் மட்டுமே, கரோனா பரிசோதனையை தொடர்ந்து செய்து வருகிறோம். கரோனாவின் தீவிரம் குறைந்து இரண்டு ஆண்டுகளை கடந்தாலும், வீரியத்தை கண்டறிய தொடர்ந்து பரிசோதித்து வருகிறோம். மரபணு பரிசோதனையும் அவ்வப்போது செய்யப்படுகிறது. இதுவரை தீவிர பாதிப்பு ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. மற்ற மாநிலங்களில் கெரோனா பரிசோதனை செய்யப்படுவதில்லை.

தமிழகத்தில் கரோனா பரிசோதனை செய்யப்படுவதால், இங்கு கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மக்களை அச்சமடைய வேண்டாம். தேவையில்லாதபோது வழக்கமான கரோனா பரிசோதனை செய்வதை கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here