‘‘இசை என்பது இறைவனை எளிதாக அடைவதற்கு உள்ள ஒரு மார்க்கம் ’’ என சென்னையில் நடைபெற்ற முத்தமிழ் பக்தி விருந்து நிகழ்ச்சியில், ‘அமுதசுரபி’ இதழ் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் கூறினார்.
கற்பக சுவாசாலயா அறக்கட்டளையின் நிறுவனர் கற்பகதாசன் டாக்டர் ஸ்ரீதரன், டாக்டர் பாலாஜி இணைந்து வழங்கிய முத்தமிழ் பக்தி விருந்து, சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய டாக்டர் ஸ்ரீதரன், ‘‘நான் ஆஸ்துமா அலர்ஜி மருத்துவராக அமெரிக்காவில் பணியாற்றி வந்தேன். இதனிடையே, கற்பகாம்பாள் மீது ஏற்பட்ட தெய்வீக பக்தி காரணமாக ஈர்க்கப்பட்டு, சென்னைக்கு வந்து ஆன்மிக பணியில் ஈடுபடத் தொடங்கினேன். கற்பகாம்பாள் மீது இதுவரை 50 பக்திப் பாடல்கள் எழுதி உள்ளேன். ‘கற்பகமே அற்புதமே’, ‘மயிலையே கயிலை’, ‘திருமயிலை எழில்மயிலே’ ஆகிய தலைப்புகளில் 3 சி.டி.க்கள் வெளியிட்டுள்ளேன்’’ என்றார்.
நிகழ்ச்சியில், ‘அமுதசுரபி’ இதழ் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் ‘இசையால் இசையும் இறைவன்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அப்போது, அவர் பேசியதாவது: இசை என்பது இறைவனை எளிதாக அடைவதற்கு உள்ள ஒரு மார்க்கம் என கருதப்படுகிறது. சப்த ஸ்வரங்களை படியாக வைத்து அதன் மீது ஏறி சொர்க்கத்தை அடைந்து விடலாம் என வேதங்கள் சொல்கின்றன.
மகாகவி பாரதியார் பல இசைப் பாடல்களை எழுதி உள்ளார். ஆனால், ஒரு தாலாட்டுப் பாடல்களை கூட பாடவில்லை. காரணம், தூங்கிக் கொண்டிருந்த பாரதத்தை, சுதந்திர எழுச்சி பெறும் வகையில், தட்டிக் கொடுக்க எழுப்ப வேண்டுமே அன்றி, தாலாட்டு பாடக் கூடாது என முடிவெடுத்தார்.
இசையில் நாட்டம் கொண்ட பாரதியார் கண்ணனிடம் புல்லாங்குழல் இருந்ததால் அவரால் கவரப்பட்டார். ராமாயணத்தில் இமயமலையை இலங்கைக்கு கொண்டு செல்வதற்காக ராவணன் அதை கையால் தூக்க முற்பட்டபோது, மலை ஆடியது. இதைக் கண்டு பார்வதி தேவி அச்சம் அடைந்தாள். அதைக் கண்ட சிவப்பெருமான் தனது கால் கட்டை விரலால் இமய மலையை சற்று அழுத்தினார். அப்போது, ராவணன் மலையின் அடியில் சிக்கிக் கொண்டான்.
அப்போது, அவ்வழியாக சென்ற வாகீசர் என்ற முனிவரின் ஆலோசனையின் படி, ராவணன் தனது உடல் நரம்புகளையே தந்தியாக்கி அதன் மூலம் சாமகானத்தை இசைத்தான். அந்த இசையில் உருகிய சிவபெருமான், ராவணனை விடுவித்தார் என சொல்லப்பட்டுள்ளது. எனவே, இசையால் இறைவனை எளிதில் சென்றடையலாம். இவ்வாறு திருப்பூர் கிருஷ்ணன் கூறினார்.
நிகழ்ச்சியில், ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஏ.வி.தர்மகிருஷ்ணன், பேராசிரியர் ராமமூர்த்தி ராவ், டாக்டர் பாலாஜி, ஜோதி டிவி நிகழ்ச்சி தயாரிப்பு துறை தலைவர் அருண்சாய் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.