பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வேலை நேரம் மீண்டும் காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலர் பி.சந்திரமோகன், பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பனுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களான இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்களின் வேலை நேரம் காலை 9 முதல் மாலை 4.45 மணி வரை என மாற்றி ஆணையிடப்பட்டது.
பல்வேறு சங்கங்கள் இந்த ஆணையை ரத்து செய்து ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்ததைபோன்று அமைச்சுப் பணியாளர்களுக்கான வேலை நேரத்தை மீண்டும் காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை என நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
அத்துடன், அலுவலகம் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் பணிநேரத்தை நிர்வாக நலன் கருதி ஒருங்கிணைக்க வேண்டியுள்ளதாலும் அமைச்சுப் பணியாளர்களின் வேலைநேரத்தை காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை என மாற்றியமைத்து ஆணை வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் கோரியுள்ளார்.
பள்ளிக்கல்வி இயக்குநரின் கோரிக்கை கவனமாக பரிசீலனை செய்யப்பட்டு, பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் வேலை நேரம் காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை என மாற்றியமைக்கப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.