பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய தீவிரவாதி உயிரிழப்பு? – காஷ்மீர் துப்பாக்கி சண்டையில் 3 பேர் மரணம்

0
179

காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இவர்களுக்கு பஹல்காம் தாக்குதலில் தொடர்பு உள்ளதா என விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா அருகே உள்ள நாதர் ட்ரால் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போகு மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கியால் சுட்டனர். இருதரப்புக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.

உயிரிழந்த தீவிரவாதிகளை அடையாளம் காணும் பணி நடைபெற்றது. இதில் உயிரிழந்தவர்களின் பெயர் ஆசிப் அகமது ஷேக், அமிர் நசிர் வானி மற்றும் யவர் அகமது பட் ஆகியோர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் ஆசிப் அகமது ஷேக் என்பவர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர் என கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் மூன்று பேரும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

48 மணி நேரத்தில் நடைபெற்ற 2-வது துப்பாக்கிச் சண்டை இது ஆகும். தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டம் ஷூகால் கெல்லர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 3 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here