சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேசத்தவரை திருப்பி அனுப்பும் பணி தொடக்கம்

0
153

நாட்டின் பல பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களை திருப்பி அனுப்பும் பணி தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை கணக்கெடுக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. பலர் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக, எந்தவித சட்டப்பூர்வமான ஆவணங்களும் இன்றி நாட்டின் பல பகுதிகளில் தங்கியிருந்த வங்க தேசத்தவர் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சிறப்பு விமானங்கள் மூலமாக திரிபுரா மாநிலம் அகர்தலாவுக்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர் அங்குள்ள எல்லை வழியாக வங்கதேசத்துக்கு அவர்களை திருப்பும் பணி தொடங்கியுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் தங்கியிருந்த வங்கதேசத்தவர்களை கைது செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தங்கியுள்ள அவர்களை சிறப்பு விமானம் மூலம் அகர்தலா அழைத்து வரும் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இதுவரை 480 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அவர்களை எல்லை வழியாக வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்பும் பணி பல்வேறு கட்டங்களாக நடைபெறும். இதுதொடர்பாக வெளியுறவு துறை அமைச்சகம் வங்கதேசத்துக்கு ஏற்கெனவே தெரியப்படுத்தியுள்ளது. அவர்களும் ஆதாரங்களை சரிபார்த்த பின்பு தங்களது நாட்டு மக்களை திரும்ப அழைத்துக்கொள்ள சம்மதித்துள்ளனர். வங்கதேசத்தவர்களை திருப்பி அனுப்பும் நடைமுறை இவ்வாரத்துக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here