மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம்: உச்ச நீதிமன்றத்துக்கு குடியரசு தலைவரின் 14 கேள்விகள் என்ன?

0
251

மசோதாக்கள் குறித்து முடிவு எடுக்க குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்ய முடியுமா என்பது உட்பட 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எழுப்பியுள்ளார். இது தொடர்பாக விளக்கம் கோரி உச்ச நீதிமன்றத்துக்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார்.

தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த 2023-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு கடந்த ஏப்ரல் 8-ம் தேதி முக்கிய தீர்ப்பு வழங்கியது.

‘மாநில அரசின் மசோதா குறித்து ஒரு மாதத்துக்குள் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும். மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் குறித்து 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவு எடுக்க வேண்டும். ஒருவேளை, தாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும்’ என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த தீர்ப்பு தொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக விளக்கம் கோரி உச்ச நீதிமன்றத்துக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: அரசியலமைப்பு சட்டம் 143 (1)-வது பிரிவு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தின்படி, 14 கேள்விகளை உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு வந்து, அதுகுறித்து தனது கருத்துகளை தெரிவிக்குமாறு கோருகிறேன்.

1. இந்திய அரசியலமைப்பு சட்டம் 200-வது பிரிவின்படி, மாநில ஆளுநரிடம் ஒரு சட்டமசோதா சமர்ப்பிக்கப்படும்போது அவருக்கு உள்ள சட்டரீதியான வாய்ப்புகள் என்னென்ன?

2. ஒரு மசோதாவை தாக்கல் செய்யும்போது, மாநில அமைச்சரவை வழங்கும் ஆலோசனைகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவரா?

3.அரசியலமைப்பு வழங்கி உள்ள விருப்பு உரிமையை ஆளுநர் பயன்படுத்துவது நியாயமானதா?

4. அரசியலமைப்பு சட்டத்தின் 361-வது பிரிவு, ஆளுநரின் நடவடிக்கைகள் தொடர்பான நீதிமன்ற மறுஆய்வுக்கு தடையாக உள்ளதா?

5. அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எவ்வித காலக்கெடுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. அப்படி இருக்க, நீதிமன்ற உத்த
ரவு மூலம் ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?

6. அரசியலமைப்பு சட்டம் 200-வது பிரிவின்படி, குடியரசுத் தலைவர் தனது அரசியலமைப்பு விருப்பு உரிமையை பயன்படுத்துவது நியாயமானதா?

7. அரசியலமைப்பு சட்டத்தின்படி குடியரசுத் தலைவரின் செயல்பாடுகளுக்கு எவ்வித காலக்கெடுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. அப்படி இருக்க, நீதிமன்ற உத்தரவு மூலம் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?

8. ஆளுநர் ஒரு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கும் போது உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனைகள், கருத்துகளை கேட்க வேண்டுமா?

9. சட்ட மசோதாக்கள் தொடர்பாக அரசியலமைப்பு சட்டம் 200-வது பிரிவின்படி ஆளுநரும், 201-வது பிரிவின்படி குடியரசுத் தலைவரும் எடுக்கும் முடிவு
கள் ஏற்றுக்கொள்ள கூடியவையா? அந்த சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு நீதிமன்றங்கள் விசாரணை நடத்தலாமா?

10. அரசியலமைப்பு சட்ட பிரிவு 142-ன் மூலம் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர் பயன்படுத்தும் அரசியலமைப்பு அதிகாரங்களை நீதித் துறை மாற்றி அமைக்க முடியுமா? அதற்கு அதிகாரம் உள்ளதா?

11. மாநில சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தைஆளுநரின் ஒப்புதல் இல்லாமலேயே அமலுக்கு கொண்டுவர முடியுமா?

12. ஒரு வழக்கில் அரசியலமைப்பு சட்டம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழும்போது, குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரை செய்ய வேண்டுமா?

13. அரசியலமைப்பு சட்டம் அல்லது தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தால் உத்தரவுகளை பிறப்பிக்க முடியுமா?

14. சட்டப்பிரிவு 131-ன்படிமத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இடையிலான பிரச்சினைகளுக்கு உச்ச நீதிமன்றம் மட்டும்தான் தீர்வு காண முடியுமா?

இவ்வாறு கடிதத்தில் குடியரசுத் தலைவர் முர்மு கேள்வி எழுப்பி, விளக்கம் கோரியுள்ளார்.

5 நீதிபதிகள் அமர்வு விளக்கம் அளிக்கும்: உச்ச நீதிமன்றத்துக்கு கேள்வி எழுப்பி குடியரசுத் தலைவர் கடிதம் எழுதியுள்ளது குறித்து உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் கூறியதாவது: சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் குறித்து முடிவு எடுப்பது தொடர்பாக ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு கடந்த ஏப்ரல் 8-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் குடியரசுத் தலைவர் முர்மு தற்போது விளக்கம் கோரியுள்ளார். அவர் எழுப்பிய 14 கேள்விகளுக்கு பதில் அளிக்க 5 நீதிபதிகள் கொண்டஅரசியல் சாசன அமர்வை அமைக்க வேண்டும். அந்த அமர்வுதான் குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here