தர்பூசணி சாகுபடிக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: சென்னையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

0
192

உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மேற்கொண்ட பொய் பிரச்சாரத்தால் தர்பூசணி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால், சாகுபடியாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

தர்பூசணி பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்க வேண்டும், கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பட்டம் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது.

இதில் தர்பூசணி பயிரிட்டு பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 82 விவசாய சங்கங்களின் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். செங்கல்பட்டு விவசாய நலச்சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் கே.மணிகண்டன், ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தி.கோவிந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 70 ஆயிரம் ஏக்கருக்கு தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு 10 சதவீதம் வரை நல்ல விலை கிடைத்து வந்தது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதகாலமாக குளிர்பானங்கள் சரியாக விற்பனையாகாத நிலையில், தர்பூசணி பழங்களால் தான் குளிர்பானங்கள் விற்பனையாகவில்லை என காரணம் காட்டி, அதன் விற்பனையை தடுக்கும் விதமாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி மூலம் பொய் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வகையில் தர்பூசணியில் சிவப்பு சாயம், சர்க்கரை பாகு உள்ளிட்டவை சேர்க்கப்படுவதாக அவர் கூறியதால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு அரசு அதிகாரியே தமிழகத்தில் சாகுபடி செய்யப்பட்ட தர்பூசணி பழங்களை நஷ்டமடைய செய்யும் வகையில் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது அனைத்து விவசாயிகளையும் கொந்தளிக்க செய்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 10 ஆண்டுகள் ஆனாலும் கடனில் இருந்து விடுபட முடியாது.

இதை கருத்தில் கொண்டு தர்பூசணி சாகுபடி செய்து அதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசு முன்வரவேண்டும். இதற்கு காரணமான உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here