மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘ட்ரெயின்’. கடந்த 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் பல்வேறு காரணங்களால் தாமதாகி வருகிறது.
இந்த நிலையில், சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசிய இயக்குநர் மிஷ்கின் இப்படத்தின் முழுக் கதையையும் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியது: “நான் 300 முதல் 600 தடவை ரயிலில் சென்றுள்ளேன். அந்த ரயிலை ஒவ்வொருமுறை பார்க்கும்போது ஒரு ராட்சஷ புழு தன் வயிற்றில் குட்டிகளை ஏற்றிச் சென்று வேறு ஒரு இடத்தில் துப்புவது போலிருக்கும்.
இப்படியான ஒரு பயணத்தில் ஓர் ஆயிரம் மனிதர்கள் அந்த ராட்சஷ புழுவின் வயிற்றில் ஏறி வேறு ஒரு இடத்தில் போய் இறங்குகிறார்கள். அதில் சிலர் இறக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் இருக்கும் கதாநாயகன் வாழ்க்கையை வெறுத்து தன் மனைவியின் சமாதியின் சிறிய செடி ஒன்றை வைத்துவிட்டு அந்த ரயிலில் ஏறுகிறான். அப்படி ஏறுபவன் அந்த புழுவின் வயிற்றில் நடக்கும் பல விஷயங்களில் அவனும் தன்னை மறந்து ஈடுபடுகிறான்.
அவன் மீண்டும் இறங்கும்போது அந்தப் பயணம் அவனுக்கு வாழ்க்கையை கற்றுத் தருகிறது. கடைசியில் அவன், “இந்த ரயிலில் நான் ஏறவில்லை என்றால், இந்த மனிதர்களை நான் சந்திக்கவில்லை என்றால் என் வாழ்க்கையே நாசமாகி இருக்கும். நான் இறந்து கூட போயிருக்கலாம். இந்த பயணம் நான் எப்படி வாழவேண்டும் என்று கற்றுத் தந்திருக்கிறது” என்று சொல்கிறான். அதுதான் படத்தின் க்ளைமாக்ஸ்” என்று மிஷ்கின் கூறினார்.








