பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து அவதூறு பரப்பிய 2 பேர் மீது வழக்கு

0
188

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக 2 பேர் மீது கர்நாடக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் உள்ள கும்பர்பேட்டையை சேர்ந்தவர் முனீர் கான் குரேஷி (36). கோழி இறைச்சி கடை நடத்தி வரும் இவர் சில தினங்களுக்கு முன்பு தனது யூ டியூப் பக்கத்தில் பஹல்காம் தாக்குதல் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ”பஹல்காம் தாக்குதலானது மத்தியில் ஆளும் பாஜக அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகும்.

பிஹார் ச‌ட்டப்பேரவைத் தேர்தலில் இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தீவிரவாதிகள் எப்படி எளிதாக தப்பிக்க முடியும்?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பாஜக இளைஞர் அணியினர் போலீஸாரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து கல்பேட்டை போலீஸார் தாமாக முன்வந்து முனீர் கான் குரேஷி மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை யூ டியூப் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளனர்.

மருத்துவ மாணவி மீது வழக்கு: விஜயபுராவை சேர்ந்த மாணவி தஸாத் ஃபரூக்கி ஷேக் (23) என்பவர் அல் அமீன் மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக தெரிகிறது. இதற்கு ஹனுமன் சேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் விஜயபுரா போலீஸாரின் கவனத்துக்கும் கொண்டு சென்றனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவி மீது பாரதீய நியாய சன்ஹிதா சட்ட‌ பிரிவுகள் 152, 197(3)(5) ஆகியவற்றின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ள‌னர்.

பகிரங்க மன்னிப்பு: இதனிடையே தஸாத் ஃபரூக்கி ஷேக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ”எனது பதிவு இந்திய மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காயமடைந்த அனைவரிடமும் நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் ஒரு இந்தியன். என் தாய் நாட்டை நேசிக்கிறேன். போர்க்கால நெருக்கடி நேரத்தில் நாட்டுக்கு எதிரான கருத்துகளை சொல்வது முட்டாள்தனமான செயலாகும். இந்த தவறை இனிமேல் நான் மீண்டும் செய்ய மாட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here