தீவிரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை கண்டித்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெட்ரோல் பங்க் உட்பட வர்த்தக நிறுவனங்களை மூடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். முக்கிய சுற்றுலா தலங்கள் உட்பட பள்ளத்தாக்கு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தீவிரவாதிகள் தாக்குலை கண்டித்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் வர்த்தக நிறுவனங்களை மூடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த கடையடைப்புக்கு அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள் உட்பட அனைத்து அமைப்புகளும் முழு ஆதரவு தெரிவித்தன. தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மக்கள் மாநாடு, அப்னி கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்தன.
மேலும், கடையடைப்புக்கு ஜம்மு காஷ்மீரில் செயல்படும் முதாஹிதா மஜ்லிஸ் உலமாவை (எம்எம்யு) சேர்ந்த மிர்வெய்ஸ் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். காஷ்மீர் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் தொழிற்துறையினரும் கடையடைப்புக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டன. அத்துடன், வர்த்தக நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. காஷ்மீர் பல்கலைக்கழகம் தனது தேர்வை தள்ளி வைத்துள்ளது.அரசு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டும் இயங்கின. பல்வேறு இடங்களில் தீவிரவாதிகளை கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.
அப்போது அப்பாவி பொதுமக்களை கொல்வதை தடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். கடந்த 35 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் முடங்கியது இதுதான் முதல் முறை. வழக்கத்துக்கு மாறாக பொதுமக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு தற்போது எழுந்துள்ளது.