பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் ஆதரவு அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரன்ட்’ (டிஆர்எப்) பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் ஆடில் குரி, ஆசிப் ஷேக், சுலைமான் ஷா மற்றும் அபு தல்ஹா ஆகிய 4 தீவிரவாதிகளின் படத்தை பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ளனர்.
இதில் ஆடில் குரி என்பவர் காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், ஆசிப் ஷேக் காஷ்மீரின் ஷோபூர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. தாக்குதல் நடந்த இடத்தை ராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
நடந்தது என்ன? – ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதி ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படுகிறது. இங்கு நேற்று முன்தினம் சுற்றுலாப் பயணிகள் குதிரை சவாரி செய்தும், ரோட்டோர கடைகளில் சாப்பிட்ட படியும், பைசரன் பள்ளத்தாக்கின் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது வனப்பகுதியில் இருந்து உள்ளூர் போலீஸாரின் சீருடையில் வந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். குறிப்பாக ஆண்களிடம் பெயர் மற்றும் மதத்தை கேட்டு தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய கடற்படை அதிகாரி, உளவுத்துறை அதிகாரி, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
விரைவில் பதிலடி: தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு விரைவில் வலுவான பதிலடி கொடுக்கப்படும். தாக்குதல் நடத்தியவர்களுக்கு மட்டும் அல்ல இந்த சதித்திட்டத்துக்கு காரணமானவர் களுக்கும் பதிலடி கிடைக்கும். தீவிர வாதத்தை நாடு பொறுத்துக் கொள்ளாது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.














