ரத்தன் டாட்டாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: ஆந்திர துணை சபாநாயகர் கோரிக்கை

0
145

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாட்டாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென ஆந்திர மாநில துணை சபாநாயகர் ரகுராம கிருஷ்ண ராஜு தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம், குண்டூரில் நேற்று பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழாவில் ஆந்திர மாநில துணை சபாநாயகர் ரகுராம கிருஷ்ண ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அங்கு வைக்கப்பட்டிருந்த மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாட்டாவின் முழு உருவ சிலையை திறந்து வைத்த அவர் இதுகுறித்து மேலும் பேசியதாவது:

ரத்தன் டாட்டா வெறும் தொழிலதிபர் மட்டுமல்ல. அவர் ஒரு சிறந்த மனிதாபிமானியும் கூட. கல்வி, மருத்துவ துறைகளில் அவர் செய்துள்ள சாதனைகள் வியக்க வைக்கின்றன. நாட்டுக்கு அவர் செய்துள்ள சேவைகளை நாம் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்து கொள்வது அவசியம்.

ஆதலால் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கிட வேண்டுமென 4 ஆண்டுகளுக்கு முன்னரே நான் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன். இந்த விருது வழங்கினாலும், வழங்காவிடிலும் இந்தியர்களின் மனதில் ரத்தன் டாடா எப்போதும் ரத்தினம் போல் ஜொலிப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

புதிய தொழில் தொடங்கும் இடத்தில் கடவுள் சிலைகள் வைப்பதை தான் நான் இதுவரை கண்டிருக்கிறேன். ஆனால், இங்கு தான் முதன் முதலில் ரத்தன் டாட்டாவின் சிலையை வைத்துள்ளதை பார்க்கிறேன். இதனை நான் வெகுவாக பாராட்டுகிறேன். இவ்வாறு ரகுராம கிருஷ்ண ராஜு பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here