முதல்வரின் குடும்பத்தைச் சார்ந்த தனி நபருக்காக விண்வெளி தொழில் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அண்ணாமலை மற்றும் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை: முதல்வர் ஸ்டாலினின் மருமகன் விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்கியதில் இருந்தே, ‘தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை’ வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில் முதல்வரின் நிழலாக இருக்கும் சபரீசன் பங்குதாரராக வகிக்கும் ‘வானம் ஸ்பேஸ்’ நிறுவனமும் 20 சதவீதம் மூலதன மானியத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த தொழில் கொள்கையை, கோபாலபுரம் குடும்பத்தின் தொழில்துறை கொள்கை என்று அழைப்பதே பொருத்தமானது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்த எந்தவித முன்னெடுப்பையும் எடுக்காத அரசு, முதல்வரின் குடும்பத்தைச் சார்ந்த ஒருவர், விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த நிறுவனத்தை தொடங்கியபின் விண்வெளிக் கொள்கையை வெளியிட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
ஏற்கெனவே உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதல்வரின் வெளிநாட்டு பயணத்தின்போது ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படும் முதலீடுகள் கானல் நீராகவே காட்சியளித்து வரும் நிலையில், முதல்வரின் குடும்பத்தை சார்ந்த தனிநபருக்காக அரசு நிர்வாகத்தின் அதிகாரத்தை பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்? இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.














