இஸ்​ரேலில் 50 ஆயிரம் தொழிலா​ளர்​கள் தேவை: உ.பி., பிஹார் மாநில அரசுகளிடம் கேட்டு கடிதம்

0
209

இஸ்ரேலில் பல்வேறு கட்டிடப்பணிக்காக 50 ஆயிரம் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். இதற்காக அந்த அரசின் சார்பில் இந்தியாவின் உத்தரபிரதேசம் மற்றும் பிஹார் அரசுகளுக்கு ஆட்களை அனுப்பக் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் கட்டிடப் பணிகளுக்கு ஆட்கள் சேர்ப்பு பணி வரும் ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளது. இந்நாட்டின் பணிகளுக்கு தேவைப்படும் தொழிலாளர்களின் வயது 25 முதல் 32 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த தொழிலாளர்கள், கட்டிட கட்டுமானம், சுகாதாரத்துறை, பொறியியல் மற்றும் பிற துறைகளில் பணியாற்றத் தேவைப்படுகின்றனர்.

இதுகுறித்து ’இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் உ.பி. அரசின் உயர் அதிகாரிகள் வட்டாரங்கள் கூறும்போது, “கடந்த ஆண்டு சுமார் 10 ஆயிரம் இந்திய இளைஞர்கள் இஸ்ரேல் நாட்டில் பணி செய்வதற்காக தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் சிறந்த அனுபவத்தின் அடிப்படையில், அவர்கள் மாதத்துக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கின்றனர்.

தற்போது, இஸ்ரேலைத் தவிர, ஜப்பான் மற்றும் பிற நாடுகளில் சுகாதாரப் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். இப்பணியில் ஆர்வமுள்ள இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன’ எனத் தெரிவித்தன.

அனுபவம் வாய்ந்த இளைஞர்களை இஸ்ரேல் மற்றும் ஜப்பானுக்கு அனுப்பும் நடவடிக்கை உ.பி., பிஹார் மாநிலங்களில் தொவங்கி விட்டன. பிற நாடுகளில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள் தங்கள் ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உ.பி, பிஹார் ஆகிய இரண்டு வட மாநிலங்களில் இருந்தும் இஸ்ரேலுக்கு சென்றவர்கள் திறம்படப் பணியாற்றுவதாக பாராட்டுகளை பெற்றுள்ளனர். இதனால், அந்நாட்டில் பணியாற்ற கூடுதல் தொழிலாளர்களை அனுப்பும் கோரிக்கையை உ.பி., பிஹார் மாநில அரசுகளுக்கு இஸ்ரேல் விடுத்துள்ளது.

தற்போது, ஐரோப்பா யூனியனில் உள்ள பல்வேறு நாடுகளிலும் மிக அதிமான எண்ணிக்கையில் சுகாதார ஊழியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்களும் உ.பி, பிஹாரில் பெறப்பட்டு வருகின்றன. இவர்களது பணி அமர்த்தல் முடிந்த பின், இஸ்ரேலுக்கானத் தொழிலாளர் சேர்க்கை நடவடிக்கை உபி, பிஹாரில் துவங்கப்பட உள்ளன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here