தமிழகத்தில் 20-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

0
281

தமிழகத்தில் இன்றுமுதல் 20-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, புத்தன் அணை ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ., திருச்சி மாவட்டம் துறையூர், நீலகிரி மாவட்டம் நடுவட்டம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோடில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின்மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (ஏப்.15) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 16 முதல் 20-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று ஓரிரு இடங்களிலும், 16 முதல் 18-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here