விசிக-வுக்கு ஆசை காட்டி திமுகவை உடைக்க சதி செய்தனர்: திருமாவளவன் குற்றச்சாட்டு

0
179

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பெரியார், அம்பேத்கர் சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. திக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சிலைகளைத் திறந்துவைத்தனர். இதில், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் திருமாவளவன் பேசியதாவது: திமுக அரசியல் இயக்கமாகவும், ஆளும் கட்சியாகவும் வீரநடை போடுகிறது. எனவே, இன்னொரு கட்சி திமுகவுக்கு முட்டுக்கொடுக்க வேண்டிட அவசியமில்லை. திமுக பலவீனமாகவும் இல்லை. திமுகவை வீழ்த்துவோம் என்றால், விசிகவையும் வீழ்த்துவோம் என்று பொருள். எனவே, எங்கள் அரசியல் கோட்பாட்டை எதிர்ப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

கூடுதலாக தொகுதி, ஆட்சியில் பங்கு தருகிறோம், திமுக அணியை விட்டு வெளியே வாருங்கள் என்று ஆசை காட்டி, திமுக கூட்டணியை உடைக்கப் பார்த்தார்கள். இதுபோன்ற அரசியல் நகர்வுகளுக்கு என்றும் நாங்கள் இடமளித்தது கிடையாது. என்னை துருப்புச்சீட்டாக வைத்து, திமுக கூட்டணியை உடைத்துவிடலாம் என்ற அவர்களது முயற்சி தோற்றுப்போனது.

அதிமுக-பாஜக கூட்டணியை பழனிசாமிதான் அறிவித்து இருக்க வேண்டும். ஆனால், அமித்ஷா அறிவித்துள்ளார். இந்நிலையில், பழனிசாமி சுதந்திரமாக முடிவெடுக்கிறார் என்பதை எப்படி நம்ப முடியும். அதிமுகவுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்று, அதிக வாக்குகளை பெற்றதாக தங்களை முன்னிறுத்த பாஜக முயற்சிக்கிறது. மேலும், அதிமுகவை வீழ்த்தி, கரைந்து போகச் செய்யும் யுக்தியையும் பாஜக கையாள்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here