ஆந்திராவில் சாலை விபத்தில் பெண் ஐஏஎஸ் அதிகாரி உயிரிழந்தார். ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், கல்யாணதுர்கம் பகுதியை சேர்ந்தவர் ரமா (50). ஐஏஎஸ் அதிகாரியான இவர் திருப்பதி அடுத்துள்ள அன்னமைய்யா மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஹந்திரி-நீவா குடிநீர் திட்ட அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதன் காரணமாக பீலேருவில் தங்கி உள்ளார்.
ராயசோட்டி மாவட்ட இணை ஆட்சியராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் ரமா, நேற்று மனுநீதி நாள் என்பதால் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறுவதற்காக பீலேருவில் இருந்து நேற்று காலையில் ராயசோட்டிக்கு காரில் வேகமாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அன்னமைய்யா மாவட்டம், எர்ரகுண்ட்லா பகுதியில் இவரது கார், எதிரே வந்த மற்றொரு கார் மீது வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஐஏஎஸ் அதிகாரி ரமா அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் ராயசோட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்துக்கு ராயசோட்டி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். விபத்து குறித்து பீலேர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாரி ரமா மறைவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.