பிரதமர் மோடிக்கு இலங்கையில் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு!

0
179

இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடிக்கு கொழும்புவில் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க பிரதமரை வரவேற்றார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக இலங்கைக்குச் சென்றுள்ளார். வெள்ளிக்கிழமை மாலை கொழும்புவில் உள்ள பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்கு அவரை இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெர்தா, சுகாதாரத்துறை அமைச்சர் நலிந்தா ஜெயதிஸ்ஸா மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட ஐந்து முக்கிய அமைச்சர்கள் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) கொழும்புவில் உள்ள சுதந்திர மைதானத்தில் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் அந்நாட்டு அதிபர் அனுர குமார திசாநாயக்க கலந்து கொண்டு பிரதமரை வரவேற்றார்.

அனுர குமார திசாநாயக்க அதிபரான பின் இலங்கைக்கு முதல்முறையாக வரும் பிரதமர் மோடிக்கு இந்த மரியாதை வழங்ப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது இரண்டு அண்டை நாடுகளுக்கு இடையிலான ஆழமான உறவுகளின் வரலாற்று சிறப்பு மிக்க அடையாளமாக அமைந்திருந்தது.

இதனிடையே, தனது இலங்கை பயணம் குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், “இலங்கையில் தரையிறங்கி விட்டேன். விமானநிலைத்திற்கு வந்து என்னை வரவேற்ற அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு நன்றி. இலங்கையில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

தனது பயணத்தின் போது பிரதமர் மோடி, இந்தியாவால் நிதியளிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் வளர்ச்சித்திட்டங்களை தொடங்கி வைக்க அநுராதபுரத்துக்கு செல்வார். அதேபோல் அந்நாட்டு அதிபர் திசநாயக்காவுடனான கலந்துரையாடலில், “பகிரப்பட்ட எதிர்காலத்துக்கான கூட்டுறவை வளர்ப்பது” என்கிற தொலைநோக்குத் திட்டத்தினை மதிப்பாய்வு செய்வார்.

பிரதமரின் இந்தப் பயணத்தின் போது இந்தியாவும் இலங்கையும் 10 முக்கியமான ஒப்பந்தங்களை அறிவிக்க உள்ளன. அவை பாதுகாப்புத்துறை கூட்டாண்மை, எரிசக்தித்துறை மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவை அடங்கும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here