கடப்பாவில் ஏழுமலையானை வழிபட்ட முஸ்லிம்கள்

0
109

ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஏழுமலையான் கோயிலில் முஸ்லிம்கள் உகாதி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டிகை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நேற்று முன்தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

இதுபோல் ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள தேவுண்ணி கடப்பா ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வர சுவாமி கோயிலிலும் திரளான பக்தர்கள் வழிபட்டனர். இங்கு மட்டும் ஆண்டுதோறும் அப்பகுதி முஸ்லிம்கள், உகாதி பண்டிகைக்கு ஏழுமலையானை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டும் உகாதி பண்டிகைக்கும் முஸ்லிம்கள் ஆண், பெண் பேதமின்றி குடும்பம், குடும்பமாக வந்து லட்சுமி வெங்கடேஸ்வரை பயபக்தியுடன், தேங்காய் உடைத்து வழிபட்டனர். அவர்களுக்கு கோயில் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதையும் அவர்கள் பக்தியுடன் வாங்கிக் கொண்டனர்.

இங்குள்ள பீபீ நாச்சாரம்மா தாயாருக்கு முஸ்லிம்கள் உகாதி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் பட்டு வஸ்திரங்கள் மற்றும் துவரம் பருப்பு, மிளகாய், உப்பு போன்றவற்றை சீர்வரிசையாக வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஆண்டும் அவர்கள் சீர்வரிசை வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here