பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக நிதி திவாரி நியமிக்கப்பட்டு உள்ளார்.
உத்தர பிரதேசத்தின் வாராணசியை சேர்ந்தவர் நிதி திவாரி. முதலில் வாராணசி வணிக வரித் துறை துணை ஆணையராக அவர் பணியாற்றி வந்தார். அந்த பணியில் இருந்து கொண்டே குடிமைத் பணித் தேர்வுக்கு அவர் தயாராகி வந்தார். கடந்த 2013-ம் ஆண்டில் குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றார்.
கடந்த 2014-ம் ஆண்டில் இந்திய வெளியுறவுத் துறையில் நிதி திவாரி பணியில் சேர்ந்தார். அவரது பணித் திறமை காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் பிரதமர் அலுவலக துணை செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போது வெளியுறவுத் துறை விவகாரம், அணு சக்தி, பாதுகாப்பு, ராஜஸ்தான் மாநில விவகாரங்களை அவர் திறம்பட கையாண்டார். கடந்த 2023-ம் ஆண்டு டெல்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை தலைமையேற்று நடத்தியவர்களில் நிதி திவாரியும் ஒருவர்.
இந்த சூழலில் பிரதமரின் தனிச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவு கடந்த 29-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. உடனடியாக புதிய பதவியை நிதி திவாரி ஏற்றுக் கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அன்றாட அலுவல்களை அவர் கவனிப்பார். குறிப்பாக அவர் பங்கேற்கும் கூட்டங்கள், அவரது உள்நாட்டு, வெளிநாட்டு பயணங்களுக்கு ஏற்பாடு செய்வார். பிரதமர் அலுவலகத்துக்கும் மத்திய அரசின் இதர துறைகளுக்கும் பாலமாக அவர் செயல்படுவார். மத்திய அரசின் கொள்கை முடிவுகளை வரையறுக்கும் உயர்நிலைக் குழுவில் நிதி திவாரி இடம்பெறுவார். அவை முறையாக அமல் செய்யப்படுகிறதா என்பதை அவர் கண்காணிப்பார்.
ஏற்கெனவே பிரதமரின் தனிச் செயலாளர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் விவேக் குமார், ஹர்திக் சதிஷ்சந்திர ஷா ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். அவர்களோடு நிதி திவாரியும் இணைந்துள்ளார்.