ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாக்களை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை மக்களவை நேற்று நீட்டித்தது.
நாடு முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் வகையில் அரசியல்சாசன (12வது திருத்தம்) மசோதா, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா ஆகியவை மக்களவையில் கடந்தாண்டு டிசம்பர் 17-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து இந்த மசோதாக்கள் பாஜக எம்.பி. சவுத்திரி தலைமையில் , 38 உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்தக் குழு இதுவரை 5 கூட்டங்களை நடத்தியுள்ளது. 6-வது கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் இந்த கூட்டத்தின் பதவிக் காலத்தை, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாள் வரை மக்களவை நீட்டித்துள்ளது.
இதுவரை உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித், ரஞ்சன் கோகாய், மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஸ் சால்வே ஆகியோர், ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த மசோதாவுக்கு பலர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். இந்த மசோதா தேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க முற்படுகிறது என நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த மசோதா அரசியலமைப்புதன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த மசோதா ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும், கூட்டாட்சி விதிமுறைகளை குறைவாக மதிப்பிடுவதாகவும் சிலர் கூறியுள்ளனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கான நடைமுறைகளை 2029-ல் தொடங்கி, 2034-ல் தேர்தல் நடத்தலாம் என இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவையோ அல்லது மாநிலத்தின் சட்டப்பேரவையே 5 ஆண்டு காலத்துக்கு முன்பாக கலைக்கப்பட்டால், மீதமுள்ள காலத்துக்கு இடைத் தேர்தல் நடத்தி கொள்ளலாம் என இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.