இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின மேலாளராக இருந்தவர் திஷா சலியன். மும்பையில் வசித்து வந்த இவர், கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி 14-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது குடியிருப்பில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். இதுவும் தற்கொலை என மும்பை போலீஸார் முதலில் தெரிவித்தனர். எனினும், அவரது குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், அவரை யாரும் தற்கொலைக்கு தூண்டியதற்கான ஆதாரம் இல்லை என்று சிபிஐ சமீபத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
இந்நிலையில், திஷாவின் தந்தை சதிஷ் சலியன் மும்பை காவல் ஆணையர் எழுத்து பூர்வமாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “எனது மகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இது தொடர்பாக சிவசேனா (உத்தவ்) எம்.எல்.ஏ. ஆதித்யா தாக்கரே உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை மும்பை காவல் இணை ஆணையர் பெற்றுக் கொண்டதாக சதிஷ் சலியன் வழக்கறிஞர் நிலேஷ் ஓஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சதிஷ் சலியன் மும்பை உயர் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது வரும் ஏப்ரல் 2-ம் தேதி விசாரணை நடைபெறும் என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.