சவுக்கு சங்கர் வேண்டுமென்றே என் மீது பழிபோடுகிறார்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

0
275

சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுகளை வீசிய விவகாரத்தில், அவர் வேண்டுமென்றே தன் மீது குற்றம்சாட்டுவதாகவும், கழிவுகளை வீசியவர்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் என்றால் நிரூபிக்கட்டும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுகளை வீசிய சம்பவத்தை ஏற்கெனவே தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டித்து இருக்கிறேன். இவ்விவகாரத்தில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. ஆனால், இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் ஒருவர் இருப்பதாக கூறுகின்றனர். அப்படி யாரும் கிடையாது. அப்படி இருந்தால் நிரூபிக்கப்பட்டும்.

அதேபோல, மாநகராட்சி ஒப்பந்தத்தை நான் எடுத்திருப்பதாகவும் கூறுகின்றனர். நான் எப்படி எடுக்க முடியும்? இந்த சம்பவத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படி இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாமே? சவுக்கு சங்கருக்கு என் மீது மறைமுகமான அஜென்டா இருக்கிறது. நான் மாநிலத் தலைவராக இல்லையென்றால், அவருக்கு வேண்டிய ஒருவரை மாநிலத் தலைவராக கொண்டு வருவதற்கு எல்லா முயற்சிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் தெரியும். டெல்லி தலைமைக்கும் தெரியும்.

குற்றங்களைக் கூறி என்னை தலைவர் பொறுப்பில் இருந்து எடுத்துவிட்டால், அவருக்கு வேண்டியவரை அப்பதிவியில் அமர்த்தி விடலாம் என அவர் திட்டமிடுகிறார். எனக்கு அவற்றை பற்றி எல்லாம் கவலையில்லை. அவரது செயல்திட்டம் வெற்றி பெறட்டும். என்னை திட்டி அவருக்கு பணம் கிடைக்கிறது என்றால் வாழ்த்துகள். அவர் நிறைய பணம் சம்பாதிக்கட்டும்.

தூய்மைப் பணியாளர்கள் கையால் மலத்தை அள்ளும் நிலையை மாற்றி, இந்தியாவிலே எங்கும் இல்லாத திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்திருக்கிறார். அதில் தவறு இருந்தால் அதிகாரிகளிடம் முறையிடலாம். அதைவிடுத்து, தூய்மைப் பணியாளர்களைக் கொச்சைப்படுத்துவது, அவர்கள் குடித்துவிட்டு தூங்குகிறார்கள் என்று பேசுவதெல்லாம் ஏற்புடையதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here