கேமரா, எஸ்ஓஎஸ் பட்டன், நவீன தீயணைப்பு அமைப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் விரைவு பேருந்துகள் ஏப்ரல் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வருகின்றன. போக்குவரத்துக் கழகங்களுக்கான புதிய பேருந்துகள் கொள்முதலில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட டெண்டர் அடிப்படையில் 50 விரைவு பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரவிருக்கின்றன. இதுதொடர்பாக அரசு போக்குவரத்து ஆர்வலர்கள் அமைப்பின் நிறுவனர் சாந்தப்பிரியன் காமராஜ் கூறியதாவது:
விரைவு பேருந்துகளில் நாளுக்கு நாள் தனியார் பேருந்துகளுக்கு இணையான நவீன வசதிகள் இடம்பெறுகின்றன. அதன்படி, பயன்பாட்டுக்கு வரவிருக்கும் விரைவு பேருந்துகளில் உள்ள தானியங்கி தீயணைப்பு அமைப்பு முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பேருந்துக்குள் சிறு புகை தென்பட்டாலும் அலாரம் அடித்துவிடும். அது தீயாக இருக்கும்பட்சத்தில் ஓட்டுநர் பட்டனை அழுத்தியவுடன் ரசாயனம் மூலம் தீயணைக்கப்படும்.
அதிகமாக தீ பரவினால் ஓட்டுநரை எதிர்பாராமல் தீயணைக்கும் அமைப்பு இயங்கிவிடும். முன்பு இந்த அமைப்பு என்ஜினில் மட்டும் இருந்த நிலையில் தற்போது பயணிகள் பகுதியிலும் பொருத்தப்பட்டுள்ளது. வண்டியை பின்நோக்கி இயக்க ஏதுவாக கேமரா வைக்கப்பட்டுள்ளது. அனைத்து இருக்கைக்கு அருகிலும் அவசரகால பட்டன் (எஸ்ஓஎஸ்), ரீடிங் லைட் போன்றவை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக விரைவு போக்குவரத்து அதிகாரிகள் கூறும்போது, “29 ஏசி பேருந்துகளும், 21 குளிர்சாதன வசதியில்லா பேருந்துகளும் ஏப்ரல் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்” என்றனர்.














