ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் என சிஐடியு கூட்டமைப்பு சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
மீட்டர் கட்டண உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ், தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்சி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் மூன்று அணிகளாக சென்னையில் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.
சென்னை அண்ணாசாலை தாராப்பூர் டவர் அருகே நடைபெற்ற கண்டன போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்றனர். ஆட்டோ கட்டணம் உயர்வு, பைக் டாக்சிகளுக்கு தடையை வலியுறுத்தி பாதாகைகளை எழுந்தியபடி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால், அண்ணாசாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல், எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்களிலும் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:
ஆட்டோ தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தில் சென்னை, புறநகரில் உள்ள 1.20 லட்சம் ஆட்டோக்களில் 60 சதவீதம் ஓடவில்லை. நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தில், மீட்டர் கட்டண உயர்வை அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் போக்குவரத்து துறை மானிய கோரிக்கையின்போது ஆட்டோக்களுடன் சென்று தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, ஆட்டோ தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் குறித்து அமைச்சர் சிவசங்கர் கூறும்போது, “அனைத்து சங்கங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம். அவர்களது கோரிக்கைகளை முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறோம். இதுதொடர்பாக முடிவு ஏற்படும் நேரத்தில் தேவையற்ற வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.
ஆட்டோ தொழிலாளர்கள் போராட்டம் நடைபெற்றபோதும், சென்னையில் நேற்று பரவலாக ஆட்டோக்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிக பாதிப்பின்றி பயணம் மேற்கொண்டதை காண முடிந்தது. மாலை 6 மணிக்குப் பிறகு அனைத்து ஆட்டோக்களும் வழக்கம்போல் இயக்கப்பட்டன.
 
            

