மத்திய பிரதேசத்தின் மோவ் நகரில் ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியாவின் வெற்றியை கொண்டாடும்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
மத்தியபிரதேசத்தின் இந்தூரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது மோவ். இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஐசிசி சாம்பியன் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் வெற்றியை இளைஞர்கள் கொண்டாடினர். இவர்கள் ஜமா மசூதி வழியாக ஊர்வலமாக செல்லும்போது அவர்கள் மீது சிலர் கற்களை வீசினர். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து ஜமா மசூதி பகுதியில் வன்முறை ஏற்பட்டு அது நகரின் பிற இடங்களுக்கும் பரவியது. ஒரு கடை மற்றும் பல வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது.
போலீஸார் விரைந்து வந்து கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் வன்முறையாளர்களை விரட்டினர். மோவ் நகரில் நள்ளிரவில் நிலைமை கட்டுக்குள் வந்ததாக மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் சிங் தெரிவித்தார்.
போலீஸ் ஐ.ஜி. அனுராக் கூறுகையில், “வன்முறையில் எத்தனை பேர் காயமடைந்தனர் என எங்களுக்குத் தெரியவில்லை. என்றாலும் மோதல் மற்றும் வன்முறை உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டது. பதற்றம் தொடர்வதால் கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டுள்ளன” என்றார்.














