சுரங்க விபத்தில் உயிரிழந்த 8 பேரில்,ஒரு தொழிலாளியின் சடலம் 16 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. மேலும் 7 பேரின் சடலங்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஸ்ரீசைலம் அணையின் இடதுபுற கால்வாயில் இருந்து தெலங்கானா மாநிலம், நல்கொண்டா வரை 14 கி.மீ தொலைவுக்கு சுரங்க கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது. கடந்த பிப்ரவரி 21-ம் தேதி நாகர் கர்னூல், எஸ்எல்பிசி சுரங்க கால்வாயில் பணிக்கு சென்றவர்கள் மீது மேற்கூரை சரிந்து விழுந்தது. சுரங்க இடிபாடுகளில் 8 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களை மீட்க கடந்த 16 நாட்களாக மத்திய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர், உள்ளூர் போலீஸ் குழு, ராணுவத்தினர் என சுமார் 9 குழுக்கள் இரவு, பகலாக போராடி வருகிறது. ட்ரோன்கள், மோப்ப நாய்கள், ரோபோக்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழந்திருக்கக்கூடும் என்று மீட்புப்படை வீரர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு தொழிலாளியின் சடலம் மீட்கப்பட்டது. அந்த சடலம் நாகர்கர்னூல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. அவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குருப்ரீத் சிங் என்பதும் மிஷன் ஆபரேட்டராக பணியாற்றியதும் தெரிய வந்துள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தெலங்கானா அரசு அறிவித்துள்ளது. மீதமுள்ள 7 பேரின் சடலங்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.














