மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது மேடை சரிந்ததால் காங்கிரஸ் நிர்வாகிகள் காயமடைந்தனர்.
மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் உள்ள ரங்மஹால் சதுக்கம் பகுதியில், காங்கிரஸ் எம்எல்ஏ ஜெய்வர்தன் சிங் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏறி நின்று, ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
ஆளும் பாஜக அரசின் விவசாய விரோதக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பாரம் தாங்காமல் மேடை சரிந்து விழுந்தது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து போபால் மாவட்ட கூடுதல் போலீஸ் துணை கமிஷனர் ராஷ்மி அகர்வால் துபே கூறும்போது, “மேடை சரிந்ததில் எத்தனை பேர் காயமடைந்தனர் என்ற விவரம் தெரியவில்லை. காயம் அடைந்த அனைவரையும் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். காயம் அடைந்த காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.