தெலங்கானாவில் ஸ்ரீசைலம் கால்வாய் திட்ட சுரங்கத்தில் நாளை முதல் ரோபோக்கள் மூலம் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
தெலங்கானாவில் ஸ்ரீசைலம் கால்வாய் திட்டத்துக்காக எஸ்எல்பிசி சுரங்கம் 14.கி.மீ தொலைவுக்கு தோண்டப்பட்டது. இதில் சுரங்கத்தின் மேற்கூரை கடந்த மாதம் 22-ம் தேதி இடிந்து விழுந்ததில் 8 தொழிலாளர்கள் சிக்கினர். சுரங்கத்துக்குள், தண்ணீர், சேறு அதிகளவில் உள்ளதாலும், அதில் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் ஒரு பகுதி மூழ்கியுள்ளதாலும், விபத்து நடந்த இடத்துக்கு மீட்பு குழுவினரால் செல்ல முடியவில்லை.
சுரங்கத்தின் கடைசி 70 மீட்டர் தூரத்துக்கு மீட்பு பணியை மிகுந்த எச்சரிக்கையுடன் மேற்கொள்ள வேண்டும் என புவியில் ஆய்வு மைய நிபுணர்கள் தெரிவித்தனர்.
இதனால் மீட்பு குழுவினரின் பாதுகாப்பு கருதி, இங்கு நாளை முதல் மீட்பு பணிக்கு ரோபோக்களை பயன்படுத்த தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. மனித உடல் இருப்பதாக மோப்ப நாய்கள் அடையாளம் கண்டுள்ள இரு இடங்களில் மீட்பு பணிகள் ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் ரோபோக்கள் உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக தெலங்கானா அரசு ரூ.4 கோடி செலவு செய்யும் என மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.














