மின்சார சேவைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செய்து தரவில்லை என்றால், தாமாக இழப்பீடு வழங்கும் சேவையை செயல்படுத்த வேண்டும் என்ற ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை மின்வாரியம் இதுவரை செயல்படுத்தவில்லை.
புதிய மின்இணைப்பு, குறைபாடு உடைய மீட்டரை மாற்றுவது, மின்கட்டண விகிதம் மாற்றம் உள்ளிட்ட மின்சார சேவைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து தரும் வகையில், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி காலக்கெடு நிர்ணயம் செய்துள்ளது. அந்த காலக்கெடுவுக்குள் செய்து தரவில்லை எனில் ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி இழப்பீட்டை மின்வாரியம் நுகர்வோருக்கு தர வேண்டும். அதன்படி, தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.200 என அதிகபட்சம் ரூ.2 ஆயிரம் வரை இழப்பீடு வழங்க வேண்டும். இது ஒவ்வொரு சேவைக்கும் மாறுபடும்.
ஆனால், இந்த இழப்பீட்டை பெறும் நடைமுறை பலருக்கும் தெரிவதில்லை. எனவே, தாமத சேவைகளால் பாதிக்கப்படும் நுகர்வோர் கேட்காமலேயே, தானாகவே இழப்பீடு வழங்கும் வகையில், இணையதள விண்ணப்பங்களில் மென்பொருள் வசதிகளை அமல்படுத்துமாறு 20224-ம் ஆண்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு அந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வரை அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர், மின்வாரியத்தின் கோரிக்கையை ஏற்று கடந்த மாதம் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்த அவகாசமும் கடந்த மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் இதுவரை தானாக இழப்பீடு வழங்கும் வசதி நடைமுறைக்கு வரவில்லை. மின்சார சேவைகளுக்கு விண்ணப்பிக்கும்போது எந்த தேதி, நேரத்துக்கு விண்ணப்பிக்கப்பட்டது, கட்டணம் செலுத்தப்பட்டது என அனைத்து விவரங்களும் இணையதளத்தில் பதிவாகின்றன. அப்படி இருந்தும் சேவைகளை சரியான நேரத்துக்குள் தருவதில்லை. இதை தவிர்க்கவே ஆணையம் அறிவுறுத்தியது. எனவே, இனிமேலும் காலம் தாழ்த்தாமல் மின்வாரியம் உடனடியாக இதை செயல்படுத்த வேண்டும் என நுகர்வோர் வலியுறுத்தி உள்ளனர்.














