வைகுண்டரின் 193-ம் பிறந்தநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவருக்கு புகழாரம் சூட்டிய முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், வைகுண்டர் விரும்பிய ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஆதிக்க நெறிகளுக்கும், சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக வெகுண்டெழுந்து, சமத்துவத்துக்காகப் போராடிய வைகுண்டரின் 193-ம் பிறந்தநாள். “எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே!” என அவர் போதித்துச் சென்றவழி நடந்து மனிதம் காப்போம்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: ‘தாழக் கிடப்போரைத் தற்காப்பதே தர்மம்’ என்னும் கொள்கையைப் பரவலாக்கம் செய்து, சாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடிய வைகுண்டரின் பிறந்தநாளில், அவர்தம் திருப்பாதங்களை போற்றி வணங்குகிறேன். நாம் ஒவ்வொருவரும் அறம்சார்ந்து வாழ வேண்டும், பொய் பேசக்கூடாது. எளிமையாய் வாழ வேண்டும் எனும் அய்யா வழியை பின்பற்றும் அனைவருக்கும் இந்நன்னாளில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: கடவுள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறார் என்ற ஞானத்தைப் போதித்து, சமூக ஏற்றத்தாழ்வுகளை விலக்கி, ஆண் பெண் அனைவரும் சமம் என, சமத்துவத்தையும் சமாதானத்தையும் விதைத்தவர் வைகுண்டர். கொலை, கொள்ளை அதிகரித்துள்ள இன்றைய காலத்தில், வைகுண்டரின் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்வது முக்கியமானது. அவர் காண விரும்பிய, ஏற்றத்தாழ்வற்ற, அமைதியான சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்போம்.
முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: சமுதாய சம தர்மத்தை நமக்கு போதித்தவர். அனைவரும் சமம் என்று நம்மை நாமே உயர்த்திக்கொள்வதற்கு பக்கபலமாக இருந்தவர் வைகுண்டர். அவரது பிறந்தநாளில் அய்யாவை போற்றி வணங்குகிறேன். அவரது வழிகாட்டுதல் என்றென்றும் நம்மை வழி நடத்தும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: மண்ணில் தோன்றிய மக்கள் அனைவரும் சமமானவர்கள் போன்ற உன்னத கொள்கைகளை உருவாக்கிக் கடைபிடித்த வைகுண்டரை போற்றி வணங்குவோம். அவர் கனவு கண்ட சமத்துவத்தை ஏற்படுத்த ஒரே வழி சமூக நீதி தான். அதற்கான அடித்தளமான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவும், அதன் வாயிலாக சமத்துவத்தை ஏற்படுத்தவும் இந்நாளில் உறுதியேற்போம்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: ஒடுக்கப்படும் மக்களைக் காப்பதும், எளியவர்களுக்கு உதவிகள் செய்வதுமே தர்மம் என்று அன்பு நெறிகளை போதித்த வைகுண்டரின் பிறந்தநாளை கொண்டாடும் பக்தர்கள் அனைவருக்கும், வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தாழக் கிடப்போரைத் தற்காப்பதே தர்மம் என்ற கொள்கை உணர்வோடு சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இறுதிவரை போராடி தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் வைகுண்டர். அவரது பிறந்தநாளில், அவர் வகுத்துக் கொடுத்த பாதையில் தொடர்ந்து பயணிக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.