சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக்கோரி வரும் மார்ச் 16-ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் பேரணி செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சி தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி, உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்.
பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் வரும் மார்ச் 16-ம் தேதி மாலை 4 மணிக்கு திருப்போரூரில் நடைபெறவுள்ளது.
திருப்போரூர் அம்பேத்கர் சிலை அருகே தொடங்கும் இந்த பேரணியை நாம் தமிழர் கட்சியுடன் கொங்கு மக்கள் முன்னணி, தமிழ்நாடு நாடார் சங்கம், இந்திய தேசிய லீக் கட்சி, புரட்சித் தமிழகம் – பறையர் பேரவை, சிறுபான்மை மக்கள் நலக்கட்சி, தமிழர் மீட்புக்களம், தமிழர் தேசம் கட்சி ஆகியவற்றின் தலைவர்களும் பங்கேற்று நடத்தவுள்ளனர். நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்தலைமை வகிக்கவுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.