காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய் மீது பெட்ரோல் குண்டு வீசிய மகன், மனைவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொளத்தூர், ஹரிதாஸ் 2-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பர் சரஸ்வதி.
இவரது மகன் தினேஷ்(25). இவர் ரஜித்தா(25) என்ற பெண்ணை காதலித்துள்ளார். இதற்கு, பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எதிர்ப்பை மீறி கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். தற்போது அமைந்தகரை எம்.எம். காலனியில் வசித்து வருகிறார்.
பணம் தராததால் ஆத்திரம்: காதல் திருமணம் செய்ததால் தினேஷை அவரது குடும்பத்தினர் வெறுத்தனர். இதற்கிடையே, வேலை எதுவும் இல்லாமல் வீட்டு வாடகைக்கூட கொடுக்க முடியாமல் தினேஷ் திணறி உள்ளார். தாயாரிடம் பண உதவி கேட்டும் அவர் தரவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 1-ம் தேதி இரவு, தினேஷ், தனது மனைவியுடன், தாய் சரஸ்வதியின் வீட்டுக்கு வந்தார். பின்னர் தான் கொண்டு வந்த பெட்ரோல் குண்டை தாயை நோக்கி வீசினார். உடனடியாக அவர் கதவை மூடியதால், பெட்ரோல் குண்டு கதவில் பட்டு பற்றி எரிந்தது.
ஆத்திரம் தீராத தினேஷ், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததோடு, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தி விட்டு மனைவியுடன் தப்பிச் சென்றார்.
இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன், கார் மீது பற்றிய தீயை அணைத்த சரஸ்வதி, இந்த விவகாரம் தொடர்பாக கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
அதன்படி, போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த தினேஷ் மற்றும் அவரைது மனைவியைக் கைது செய்தனர். பின்னர், இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.