ஹெலிகாப்டரில் இருந்து எதிரிநாட்டு போர்க்கப்பலை தகர்க்கும் குறுகிய தூர ஏவுகணையை (என்ஏஎஸ்எம்-எஸ்ஆர்), டிஆர்டிஓ மற்றும் கடற்படை வெற்றிகரமாக பரிசோதித்தன.
கடற்படை பயன்பாட்டுக்கு, ஹெலிகாப்டர்களில் இருந்து எதிரிநாட்டு போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் குறுகிய தூர ஏவுகணையை (என்ஏஎஸ்எம்-எஸ்ஆர்) டிஆர்டிஓ தயாரித்தது. சுமார் 50 கி.மீ தூரத்துக்குள் உள்ள இலக்கை, இந்த ஏவுகணை மூலம் துல்லியமாக தகர்க்கமுடியும்.
இந்த ஏவுகணையில் ‘மேன்-இன்- லூப்’ என்ற தனிச்சிறப்பான அம்சம் உள்ளது. இதன் மூலம் ஹெலிகாப்டரில் பறந்தபடியே, இலக்கை கணக்கிட்டு ஏவுகணை மூலம் பைலட் துல்லிய தாக்குதல் நடத்தமுடியும். கடல் மட்டத்தில் இருந்து குறைந்த உயரத்தில் ஹெலிகாப்டரில் பறந்தபடியே இந்த தாக்குதலை நடத்தமுடியும் என்பதால், இதை ரேடார் மூலமும் கண்டுபிடிக்க முடியாது. மேலும், இலக்கை கண்டறிந்து தாக்குதல் நடத்த அகச்சிவப்பு கதிர் தொழில்நுட்பமும் இதில் உள்ளது.
ஒடிசாவில் உள்ள சண்டிப்பூர் பரிசோதனை மையம் அருகே இந்த ஏவுகணை சோதனை கடந்த செவ்வாய் கிழமை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கடலில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய கப்பல் இலக்கை, ஏவுகணை துல்லியமாக தாக்கியது. இந்த வெற்றிகர சோதனைக்காக டிஆர்டிஓ மற்றும் இந்திய கடற்படை மற்றும் ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டவர்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார்.














