தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளுங்கள்: மாணவர்களுக்கு ராஜ்நாத் சிங் அறிவுரை

0
98

‘‘புதிய தொழில்நுட்பங்களை நாம் அறிந்துகொள்ள வேண்டும்’’ என மாணவர்களுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுரை வழங்கினார்.

தேசிய அறிவியல் தினம், ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டிஆர்டிஓ) அரங்கில் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் முக்கிய விருந்தினராக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு, மாணவர்களிடையே பேசியதாவது:

நோபல் பரிசை வென்ற சர். சி.வி. ராமன் அவர்கள் பிப்ரவரி மாதம் 28-ம் தேதி ‘ராமன் எஃபக்ட்’ எனும் சூத்திரத்தை கண்டறிந்தார். ஆதலால் நாம் இந்த நாளை தேசிய அறிவியல் நாளாக கொண்டாடுகிறோம். தற்போதைய சூழலில் விவசாயம் உட்பட அனைத்து துறையிலும் அறிவியல் முக்கிய பங்கு வகிக்கிறது. நானும் அறிவியல் படித்த மாணவனே. மேலும், நான் அறிவியல் ஆசிரியராக கூட பணியாற்றி உள்ளேன். அறிவியல் மூலம் கிடைக்கும் நன்மைகளை மாணவர்கள் நன்கறிய வேண்டும். மனித வளம், அறிவியல் பயன்பாடு போன்றவற்றை கண்டிப்பாக அறிதல் அவசியம்.

நாட்டின் வளர்ச்சியில் மாணவர்களின் பங்கு மிக முக்கியம். புதிய தொழில்நுட்ப வளர்ச்சியையும் நாம் தொடர்ந்து கவனித்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கு நாம் பழகிடவும் வேண்டும். புதிய தொழில்நுட்பங்கள் நம் நாட்டிலும் பல அறிமுகமாகி வருகின்றன. இதனால் தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகம் எடுத்துள்ளது. பாதுகாப்பு துறையிலும் புதிய தொழில்நுட்ப வளர்ச்சி புகுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here