ஒரு நாள் அன்னதானம் வழங்க ரூ.44 லட்சம் நன்கொடை: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

0
149

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரு நாள் அன்னபிரசாதம் வழங்க விரும்புவோர் ரூ.44 லட்சம் நன்கொடை செலுத்த வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இவர்களுக்காக திருமலையில் மாத்ரு ஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பாள் கூடத்தில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னபிரசாத திட்டம் எனும் பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மற்றும் அரசு வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள பணத்தில் இருந்து கிடைக்கும் வட்டியில் இருந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.

மாத்ரு ஸ்ரீ வெங்கமாம்பாள் கூடம் தவிர திருமலையில் உள்ள வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், கோவிந்தராஜர் கோயில், விஷ்ணு நிவாசம், மாதவம் விடுதிகள் என பல இடங்களில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதனால் சுமார் 1 லட்சம் பக்தர்கள் பலனடைந்து வருகின்றனர்.

இந்த திட்டத்திற்கு பக்தர்களும் தாராளமாக நன்கொடை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் ஒருநாள் அன்ன பிரசாதம் வழங்க விரும்புவோர் ரூ.44 லட்சம் நன்கொடை செலுத்த வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மேலும் காலை சிற்றுண்டிக்கு மட்டும் ரூ.10 லட்சம், மதிய உணவு அல்லது இரவு உணவுக்கு ரூ.17 லட்சம் எனவும் நன்கொடை வழங்கலாம் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here