பெங்களூருவில் நடந்த சம்பவம் போல் மனைவி சித்ரவதை தாங்காமல் மும்பை ஐ.டி. மேலாளர் தற்கொலை

0
193

ஆக்ராவில் உள்ள டிபன்ஸ் காலனியில் வசிப்பவர் நரேந்திர சர்மா. விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் மானவ் சர்மா (25), மும்பையில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். மானவ் சர்மாவுக்கும் நிகிதா சர்மா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் மும்பையில் குடியேறினர்.

இந்நிலையில், கடந்த 24-ம் தேதி வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டு மானவ் சர்மா தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் தனது முடிவுக்கான காரணத்தைக் கூறி வீடியோ ஒன்றை பதிவு செய்து வைத்துள்ளார். மொத்தம் 6 நிமிடங்கள் 57 நொடிகள் கொண்ட அந்த வீடியோவில், “அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு வேறு வழி தெரியவில்லை. ஆண்களின் போராட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மனைவியின் சித்ரவதை தாங்காமல் ஆண்கள் பலர் தனிமைப்படுத்தப் படுகின்றனர். ஆண்களைப் பற்றியும் அவர்களின் கஷ்டங்கள் பற்றியும் பேச யாராவது முன்வர வேண்டும்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.

மேலும், தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதாகவும், காதலனுடன் வாழ மனைவி விருப்பம் தெரிவித்ததாகவும் மானவ் கூறியுள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் நிகிதா கூறும் போது, “மானவ் அளவுக்கதிகமாக குடிப்பார். மது குடித்து விட்டு என்னை பல முறை அடித்திருக்கிறார். பல முறை தன்னைத்தானே அவர் காயப்படுத்திக் கொண்டுள்ளார். இதுகுறித்து மாமனார் குடும்பத்தினரிடம் கூறினேன். ஆனால், இது கணவன்-மனைவி பிரச்சினை. இதில் நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை என்று கூறிவிட்டனர். என்னுடைய தரப்பு நியாயத்தையும் கேளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

பெங்களூரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிய அதுல் சுபாஷ் என்ற இளைஞர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். தற்போது அதேபோல் மேலும் ஒரு இளைஞர் தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here