சென்னை புறநகர் பகுதிகளில் 72 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, அதில் மினி பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இந்த வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க விரும்புவோர் மார்ச் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மினி பேருந்துகள் இயக்குவதற்கான புதிய வழித்தடங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் கண்டறிந்துள்ளன.
அதன்படி சென்னை வடகிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் 6 புதிய வழித்தடங்கள், சென்னை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் 7 வழித்தடங்கள், அம்பத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் 9 வழித்தடங்கள், பூந்தமல்லி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் 9 வழித்தடங்கள், செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் 2 வழித்தடங்கள் என மொத்தம் 33 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அதேபோல் சோழிங்கநல்லூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் 11 வழித்தடங்கள், தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் 6 வழித்தடங்கள், தென்மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் 9 வழித்தடங்கள், மீனம்பாக்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் 13 வழித்தடங்கள் என மொத்தம் 39 புதிய வழித்தடங்கள் தென் மண்டலத்தில் கண்டறியப்பட்டுள்ளன.
இவற்றில் மகளிர் தொழிற்பேட்டை முதல் ஆவடி பேருந்து நிலையம் வரை, அம்பத்தூர் நகராட்சி அலுவலகம் முதல் அம்பத்தூர் ரயில் நிலையம் வரை, பழைய மாமல்லபுரம் சாலை முதல் காரப்பாக்கம் 200 அடி ரோடு வரை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை முதல் அஷ்டலட்சுமி நகர் காவல்பூத் வரை, ராமாபுரம் டிஎல்எஃப் முதல் போரூர் சுங்கச்சாவடி வரை, ஆலந்தூர் மெட்ரோ முதல் கத்திப்பாரா வரை, கீழ்கட்டளை பேருந்து நிறுத்தம் முதல் குரோம்பேட்டை தாலுகா அலுவலகம் வரையிலான வழித்தடங்களும் அடங்கும்.
இந்த 72 புதிய வழித்தடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மினி பேருந்துகளை இயக்க விரும்புவோர், தங்களுக்கான வழித்தட விவரங்களை குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மார்ச் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். ஒரு வழித்தடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும் பட்சத்தில் குலுக்கல் முறையில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார்.