சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் தெலுங்கு மொழி கட்டாயம்: முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவிப்பு

0
96

தெலங்கானாவில் வரும் 2025-26-ம் கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழி கட்டாயப் பாடமாக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று முன்தினம் மாலை தலைநகர் டெல்லிக்கு புறப்பட்டார். அவர் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது தெலங்கானாவுக்கு வரவேண்டிய நிதி மற்றும் மாநிலம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பிரதமரிடம் பேசினார். நாகர் கர்னூலில் குடிநீர் திட்ட சுரங்கத்தில் 8 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில் அங்கு நடைபெறும் மீட்புப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் ரேவந்த் ரெட்டி கூறியதாவது: பிரதமரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தேன். ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க வேண்டும், மத்திய பாதுகாப்பு துறை திட்டங்களை ஹைதராபாத்தில் செயல்படுத்த வேண்டும், வெளிவட்ட சாலை மற்றும் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.

மத்திய அரசின் மும்மொழி திட்டம் குறித்து தற்போது பரவலாக விவாதம் நடந்து வருகிறது. தெலங்கானாவில் வரும் 2025-26-ம் கல்வி ஆண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தெலுங்கு மொழி கட்டாயப் பாடமாக்கப்படும்.

இது, தெலங்கானாவில் கடந்த 2018 முதல் அமலில் இருந்தாலும், அதனை முந்தைய பிஆர்எஸ் அரசு முழுமையாக அமல்படுத்தவில்லை. இந்த திட்டத்தை நாங்கள் முழுமையாக அமல்படுத்துவோம்.

சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்ற பிற கல்வி வாரியங்களில் படிக்கும் மாணவர்களுக்கும் தெலுங்கு மொழி கட்டாய பாடமாக்கப்படும். பிற மாநிலங்களில் இருந்து தெலங்கானா வந்து படிக்கும் மாணவர்கள் சுலபமாக தெலுங்கு மொழி கற்க ‘வெண்ணிலா’ எனும் புத்தகத்தை மாநில அரசு வெளியிடும். இவ்வாறு ரேவந்த் ரெட்டி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here