பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. பாஜக எம்எல்ஏக்கள் 7 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் பாஜகவை சேர்ந்த சஞ்சய் சரோகி, சுனில் குமார், ஜிபேஷ் மிஸ்ரா, மோதிலால் பிரசாத், கிருஷ்ண குமார் மந்தூ, ராஜுகுமார் சிங், விஜய் குமார் மண்டல் ஆகிய 7 எம்எல்ஏக்கள் நேற்று கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பிஹாரில் இந்த ஆண்டு நவம்பரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிஹார் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் இந்த விரிவாக்கம் நிகழ்ந்துள்ளது.
முன்னதாக, பிஹார் வருவாய்த் துறை அமைச்சரும் மாநில பாஜக தலைவருமான திலீப் ஜெய்ஸ்வால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை அடிப்படையில் பதவி விலகுவதாக அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து திலீப் ஜெய்ஸ்வால் கூறுகையில், “ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை அடிப்படையில் பாஜக செயல்படுகிறது. எனவே வருவாய்த் துறை அமைச்சர் பதவியில் இருந்து நான் விலகுகிறேன். பாஜகவின் மாநில தலைவர் என்ற பொறுப்பு வழங்கியுள்ள கட்சியின் மத்திய தலைமைக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.