உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையில் சென்னை மருத்துவ கல்லூரியில் மாணவர் தூதுவர் குழு

0
118

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை – சென்னை மருத்துவக் கல்லூரியில் உறுப்பு தான மாணவர் தூதுவர் குழு நேற்று தொடங்கப்பட்டது. அதற்கான இலச்சினையை கல்லூரி முதல்வர் டீன் தேரணிராஜன், துணை முதல்வர் கவிதா ஆகியோர் வெளியிட்டனர்.மருத்துவ கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், இளநிலை மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலர் என்.கோபாலகிருஷ்ணன் பேசியதாவது: இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் உள்ளது. ஒருவர் மூளைச்சாவு அடையும்போது, அதனை குறிப்பிட்ட கால இடைவெளியில், உரிய மருத்துவ அறிவியல் முறையில் உறுதி செய்வது அவசியம்.

அதன் பின்னர், சம்பந்தப்பட்ட நோயாளியின் உறவினர்களிடம் ஆலோசித்து உறுப்பு தானத்துக்கு ஒப்புதல் பெறுவது முக்கியம். அதைத்தொடர்ந்து உறுப்புகளை முறையாக அகற்றி, பாதுகாப்பாக மற்ற நோயாளிகளுக்கு பொருத்த வேண்டும்.

இந்த நடைமுறைகளுக்குள் மருத்துவரீதியாகவும், சட்ட ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களும், சவால்களும் உள்ளன. அது தொடர்பான புரிதலை சமூகத்தில் ஏற்படுத்தினால் மட்டுமே உறுப்பு தானத்தை பரவலாக அதிகரிக்க முடியும். அதைக் கொண்டு கல்லூரிகளில் உறுப்பு தான மாணவர் தூதுவர் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.

முதல்கட்டமாக சென்னை மருத்துவ கல்லூரியில் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர், துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்களின் வழிகாட்டுதலில் இக்குழு இயங்கும். இக்குழுவில் இணையும் மருத்துவ இளநிலை மாணவர்களுக்கு உறுப்புதானம் குறித்த பயிற்சி வழங்கப் படும். அவர்கள் சமூகத்தில் உறுப்பு தானத்தை ஊக்குவிப்பதற்கான தூதர்களாக செயல்படுவார்கள்.

மக்களிடையே அந்த குழுவினர் உறுப்பு தானம் குறித்த புரிதல் அவசியத்தை உணர்த்த உரிய நடவடிக்கை எடுப்பார்கள். விரைவில் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இத்திட்டம் விரிவுபடுத்தப் படவுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here