துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கேப்ரியல்லா இணைந்து நடித்துள்ள படம் ‘வருணன்’. ஜெயவேல்முருகன் இயக்கியுள்ளார். யாக்கை பிலிம்ஸ் தயாரித்துள்ளது. வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பு செய்துள்ளது. இதில் ராதா ரவி, சரண்ராஜ், ஷங்கர்நாக் விஜயன், ஹரிபிரியா, ஜீவா ரவி, மகேஷ்வரி மற்றும் பலர் நடித்துள்ளனர். போபோ சஷி இசையமைத்துள்ளார். ஸ்ரீராம சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மார்ச் 14 -ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படம் பற்றி ஜெயவேல்முருகன் கூறும்போது, “இது வட சென்னையில் நடக்கும் கதை. இன்றைக்குத் தண்ணீர் கேன் தவிர்க்க முடியாததாகி விட்டது. ராதா ரவி, தண்ணீர் கேன் சப்ளை செய்பவர். அவரிடம் மதுரை, நெல்லை உட்பட தென் மாவட்டங்களில் இருந்து வந்து சிலர் வேலைபார்க்கிறார்கள்.
அதில் ஒருவர் துஷ்யந்த். இவருக்கும் தண்ணீர் கேன் விற்கும் இன்னொரு கோஷ்டிக்கும் நடக்கும் பிரச்சினைதான் படம். வானம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகிய ஐம்பூதங்கள் பொதுவானவை என்ற கருத்தையும் தண்ணீரின் அவசியத்தையும் சொல்லும் படம் இது. ‘நீரின்றி அமையாது உலகு’ என்பதுதான் படத்தின் கேப்ஷன். தண்ணீர் கடவுள் பேசுவதுபோல, ‘வாய்ஸ் ஓவர்’, படத்தின் பல இடங்களில் வரும். அந்த குரலை நடிகர் சத்யராஜ் கொடுத்திருக்கிறார். படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது” என்றார்.