போலியான செய்திகளைப் பரப்ப வேண்டாம்: கேரள காங்கிரஸ் கட்சிக்கு நடிகை பிரீத்தி ஜிந்தா கண்டனம்

0
238

போலியான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கேரள காங்கிரஸ் கட்சிக்கு பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகையான பிரீத்தி ஜிந்தா, பஞ்சாப் கிங்ஸ் லெவன் ஐபிஎல் அணியின் இணை உரிமையாளராக உள்ளார். இந்நிலையில், தனது சமூக வலைதள கணக்கை பாஜகவுக்கு வாடகைக்கு விட்டு ரூ.18 கோடி வங்கிக்கடனை தள்ளுபடி பெற்றுள்ளதாக நடிகை பிரீத்தி ஜிந்தா மீது கேரள காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்தது. மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் நியூ இண்டியா கோ ஆப்பரேட்டிவ் வங்கியில், நடிகை பிரீத்தி ஜிந்தாவுக்கு கணக்கு இருந்தது. அந்த வங்கி மூலம் 10 ஆண்டுக்கு முன்பு அவர் ரூ.18 கோடி கடன் பெற்றார். பின்னர், எந்தவித பாக்கியும் இல்லாமல் அந்த கடனை அவர் திருப்பிச் செலுத்திவிட்டார்.

இந்நிலையில், அண்மையில் அந்த வங்கி திவால் நிலைக்கு சென்றுவிட்டது. தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் நேரடி கண்காணிப்பில் வங்கி நிர்வாகம் இயங்கி வருகிறது. இதனிடையே, சமூக வலைதள கணக்கை பாஜகவுக்கு வாடகைக்கு விட்டு ரூ.18 கோடி வங்கிக்கடன் தள்ளுபடியை பிரீத்தி ஜிந்தா பெற்றுள்ளதாக கேரள மாநில காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

இதுதொடர்பாக நடிகை பிரீத்தி ஜிந்தா நேற்று தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது: நான் மட்டுமே எனது சமூக வலைதள பக்கத்தை கையாண்டு வருகிறேன். இதுபோன்ற போலிச் செய்திகளை பரப்புவது அந்தக் கட்சிக்கு (காங்கிரஸ்) வெட்கக்கேடான விஷயமாகும். யாரும் எனது கடனை தள்ளுபடி செய்யவில்லை. எனது பெயரை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாக கூறியிருப்பது அதிர்ச்சியை தருகிறது. 10 ஆண்டுக்கு முன் நான் வாங்கிய கடனை முற்றிலும் திருப்பிச் செலுத்திவிட்டேன். எனது இந்தப் பதிவு அனைத்துக் குற்றச்சாட்டுகள், அவதூறுகளுக்கு விளக்கமளிப்பதாக அமையும் என்று நம்புகிறேன். போலியான செய்திகளை பரப்பி எனது புகழைக் கெடுக்க முயற்சி செய்யவேண்டாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here