திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே கோஷ்டி மோதலில் 5 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வீரவநல்லூர் அருகே அத்தாளநல்லூரைச் சேர்ந்த விவசாயி சின்னத்துரை (38), உப்புவாணிமுத்தூரைச் சேர்ந்த சிவனுபாண்டி ஆகிய இருவரது குடும்பத்தினருக்கு இடையே, அங்குள்ள சுடலைமாடன் சுவாமி கோயிலில் சாமி ஆடுவது தொடர்பாக, 2008-ம் ஆண்டில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில், 2009-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி சின்னத்துரையின் ஆடுகள் காணாமல்போனது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. அடுத்த நான்கு நாட்களில் வயலில் அறுவடை நடைபெற்ற போது அவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் சின்னத்துரை, அவரது சகோதரி பாண்டியம்மாள் (46), அவரது மகன் மணிகண்டன் (25), கருங்காடு நடுத்தெரு கி.முத்துப்பாண்டி (30) ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். எதிர்தரப்பில் குணசேகரன் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
சின்னத்துரை, பாண்டியம்மாள் உள்ளிட்ட 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், சொர்ணபாண்டி (60), பொன்னுத்துரை (51), முத்துப்பாண்டி (63), சிவனுபாண்டி (73), கருத்தபாண்டி (47), ஆறுமுக நயினார் (41), சுப்பிரமணியன் (36), முருகன் (41), மகாராஜன் (42), மற்றொரு கருத்தபாண்டி (50), இசக்கி (71), ஆதிமூலகிருஷ்ணன் (39), மாயாண்டி (84) ஆகிய 13 பேரை வீரவநல்லூர் போலீஸார் கைது செய்தனர். இதுபோல், குணசேகரன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அர்ஜூனன் ( 51) என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்து சின்னத்துரை உட்பட 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், சொர்ணபாண்டி, , முத்துப்பாண்டி , கருத்தபாண்டி, ஆறுமுக நயினார், சுப்பிரமணியன், முருகன், மகாராஜன், மற்றொரு கருத்தபாண்டி, ஆதிமூலகிருஷ்ணன், மாயாண்டி ஆகிய 10 பேருக்கும் தலா நான்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். நான்கு ஆயுள் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சிவனுபாண்டி, இசக்கி, பொன்னுத்துரை ஆகியோர் இறந்துவிட்டனர்.
இதுபோல், குணசேகரன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அர்ஜுனனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.














